நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டப் பயணம் இன்று அதிகாலை நிறைவடைந்தது. 10 நாட்கள் நிலவை நோக்கிய பயணத்தை முடித்த 4 விண்வெளி வீரர்களுடன் வந்த விண்கலம், சான் டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் நிலவை நோக்கிச் சென்று திரும்பிய முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் ஏப்ரல் 2 அன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது. பயணத்தின் போது நிலவின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து, நிலவுக்கு சுமார் 6,545 கி.மீ. வரை நெருங்கி சென்ற குழு, மனிதர்கள் இதுவரை காணாத வகையிலான படங்களைப் பதிவு செய்து அனுப்பியது.

பயணத்தின் உச்ச தூரமாக பூமியிலிருந்து சுமார் 4,06,778 கி.மீ. வரை சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1970 ஆம் ஆண்டு அப்பல்லோ 13 திட்டத்தில் பதிவான 4,00,171 கி.மீ. என்ற சாதனையை இது முறியடித்ததாக கூறப்படுகிறது. நிலவை அண்மித்த நிலையில் சுமார் ஏழு மணி நேரம் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

அந்த கண்காணிப்பின் போது இரண்டு புதிய பிரகாசமான பள்ளங்களை கண்டறிந்து அவற்றுக்கு பெயர் சூட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிகரமான திரும்புதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆர்டெமிஸ் 3 பயணத்தில் விண்கல இணைப்பு (டாக்கிங்) தொடர்பான பயிற்சிகளை விண்வெளி வீரர்கள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2028ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் 4 மூலம் நிலவின் தென்பகுதியில் மனிதர்களைத் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.