மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கொல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் வெளியான இந்த அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களுக்குள் யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கட்சி தெரிவித்தது.
மேலும், குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்பதும் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளது.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி நடக்கிறது. மொத்தம் 294 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப். 23ல் 152 தொகுதிகளிலும், ஏப். 29ல் 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது; மே 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, மேற்கு வங்க மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு ஆட்சியை விமர்சித்த அவர், மாநிலத்தின் இழந்த பெருமையை மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்தார்.



