புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, இந்த கல்வியாண்டு முதல் 6ம் வகுப்பில் 3வது மொழி கற்பித்தலை கட்டாயமாக்கி சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்றாம் மொழிக்கான பாடத்திட்டத்தை இன்னும் உருவாக்காத பள்ளிகள், 7 நாளுக்குள் வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) பன்மொழித் தன்மையையும் இந்திய மொழிகளின் கலாசாரப் புரிதலையும் வளர்க்கும் வகையில் “R1, R2, R3” அமைப்பில் இரண்டு இந்திய மொழிகளை கற்பிக்க பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 6ம் வகுப்பில் “R3” எனப்படும் 3வது மொழி கட்டாயமாகிறது.

அரசியலமைப்பில் இடம்பெற்ற மொழிகளுக்கான அதிகாரப்பூர்வ பாடப்புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும், அதுவரை உள்ளூர் புத்தகங்கள் அல்லது கற்றல் பொருட்களை பயன்படுத்தி பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

மேலும், 6ம் வகுப்பில் பள்ளி அறிமுகப்படுத்தும் மொழிகளே 9, 10ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு விருப்பத் தேர்வாக தொடர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் தேர்ந்தெடுத்த “R3” மொழியை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களுக்கு தெரிவித்து, OASIS இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும்.

இதுகுறித்து சென்னை சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலக அதிகாரிகள், இதுவரை மண்டல அலுவலகங்களுக்கு எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். கல்வியாளர் ஜெயப்ரகாஷ் காந்தி, மும்மொழி கொள்கையை அவசரப்படுத்தாமல், வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் உருவாக்கி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, தகுதியான ஆசிரியர்களை நியமிக்க போதிய அவகாசம் வழங்கிய பின் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.