நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நடித்த, வெளியீட்டுக்குத் தயாராக உள்ள ஜனநாயகன் திரைப்படம் டெலிகிராம் செயலியில் முழுமையாக கசிந்ததாக தகவல் வெளியாகி, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் வெளியாவதில் ஏற்கெனவே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், இந்த கசிவு தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்டதா, அல்லது யாரோ சுயலாபத்திற்காக திருட்டுத்தனமாக வெளியிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் சில காட்சிகள் பரவியதற்கு தி.மு.க.வினர் காரணம் என விஜய் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையில், படத்தின் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், படக்காட்சிகளை பகிர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விஜய் நடித்த துப்பாக்கி, பீஸ்ட் படங்களைப் போலவே, ஜனநாயகன் படத்திலும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டியுள்ளதாக கூறி எதிர்ப்பும் எழுந்துள்ளது.