சென்னை: தியேட்டரில் வெளியாகும் முன்பே ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகியதாக கூறப்படும் சம்பவம், திரைத் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த், இந்த கசிவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக கூறி, திரை அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும் என்றும், அரசு குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சூர்யா இதை “மனதை உடைக்கும் அநீதி” எனக் குறிப்பிட்டு, கசிந்த பிரதியை பார்க்கவும், பகிரவும், இதைப்பற்றி பேசவும் வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். சிவகார்த்திகேயன், படங்கள் பலரின் ரத்தம்-வியர்வை உழைப்பால் உருவாகின்றன என்று கூறி, திரையரங்கில் வெளியான பிறகே பார்த்து ரசிக்க வேண்டும் என்றும், பொறுப்பாளர்கள்மீது கடும் நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டா, இந்த கசிவு தன்னை மிகுந்த ஆத்திரப்படுத்துவதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கண்டறியத் தவறினால் அது அமைப்பின் தோல்வி என்றும் கூறினார். சரத்குமார், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று கூறி, உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பூஜா ஹெக்டே, ரசிகர்களுக்கு சிறந்த அனுபவம் தர குழு பல மணி நேரம் உழைத்த நிலையில் கசிவு வருத்தமளிப்பதாக கூறி, விஜய் சாரின் கடைசி படத்தை பெரிய திரையில் கொண்டாட திரைக்கு வரும் வரை காத்திருக்கலாம் என்றார். சிரஞ்சீவி, ஜிவி பிரகாஷ், குஷ்பு, விஷால் உள்ளிட்டோரும் திரைத்திருட்டை வன்மையாக கண்டித்து, திருட்டுப் பிரதிகளை தவிர்க்கவும் கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர்.




