கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

புர்பா பர்தமனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திரண்டிருந்த பெரும் கூட்டம் மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது என்றார். மே 4-ஆம் தேதி வெளியாகும் முடிவுகளுக்கான “டிரெய்லர்” போலவே இந்தக் கூட்டம் இருப்பதாகவும், வாக்காளர்களின் உற்சாகம் மற்றும் தீர்மானம் மாநிலம் மாற்றத்துக்கு தயாராக இருப்பதை காட்டுவதாகவும் கூறினார்.

மேலும், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அதிகளவு வாக்குப்பதிவு நடந்ததாகவும், பெண்கள் பெருமளவில் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டும் தெரிவித்தார்.

பீஹார், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடந்த தேர்தல்களையும் நினைவுகூர்ந்த மோடி, அதிக வாக்குப்பதிவும் பெண்களின் அதிக பங்கேற்பும் இருந்த இடங்களில் பாஜ தலைமையிலான கூட்டணி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதாக கூறினார். மேற்கு வங்கத்தை வளர்ச்சியில் புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல பாஜ உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திரிணமுல் காங்கிரசின் “இரக்கமற்ற ஆட்சி” காரணமாக உருவான அச்சத்தை நம்பிக்கையாக மாற்றுவதே தனது உத்தரவாதம் என்றும் பிரதமர் கூறினார்.