ஏப்.11 இன்று, இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்த நாள் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 200வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்கவிருப்பதால், நாளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

1827ல் மகாராஷ்டிராவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த புலே, ஆரம்பத்தில் சந்தித்த சிரமங்களையும் மீறி கற்றலிலும் சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பிலும் உறுதியாக இருந்தார். துணிவு, இடைவிடாத தேடல், பொதுநல நோக்கம் ஆகியவை அவரது வாழ்க்கையின் அடையாளங்களாகக் கூறப்படுகிறது.

அவரது இலக்கின் மையமாக கல்வி இருந்தது. பலருக்கு கற்றல் மறுக்கப்பட்ட காலத்தில், பெண்களுக்கும் முறையான கல்வி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் முன்மாதிரி பள்ளிகளைத் திறந்து, அறிவு என்பது சிலருக்கான சிறப்புரிமை அல்ல; பகிரப்பட வேண்டிய சக்தி என்ற கருத்தை வலியுறுத்தினார்.

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், நலிவடைந்தோர் ஆகியோரின் கண்ணியத்தை உறுதி செய்ய அவர் பாடுபட்டதோடு, சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தார். அவர் நிறுவிய சத்யசோதக் சமாஜம், சமூக சீர்திருத்தம், சேவை மற்றும் மனித மாண்பை உயர்த்தும் பணிகளில் முன்னணியில் இருந்த முக்கிய இயக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், அவரது மனைவி சாவித்திரிபாய் புலேவின் பங்களிப்பும் நினைவுகூரப்படுகிறது. பெண்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று தீவிரமாகக் குரல் கொடுத்த அவர், புலே மறைவுக்குப் பிறகும் அந்த பணியைத் தொடர்ந்தார். 1897ல் பிளேக் பரவியபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த நிலையில், தாமும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கட்டுரை குறிப்பிடுகிறது.