ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு ரூ.10,000க்கு மேற்பட்ட தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்பும்போது, அது ஒரு மணி நேரம் கழித்தே பெறுநரின் கணக்கில் சேரும் வகையில் புதிய விதிகளை ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) முன்மொழிந்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு பணம் அனுப்புவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. அந்த ஒரு மணி நேர இடைவெளிக்குள் மோசடி நடந்ததை உணர்ந்தால், பரிவர்த்தனையை ரத்து செய்யும் வாய்ப்பும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அவர்கள் முன்கூட்டியே நியமித்த “நம்பகமான நபர்” ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்படும் என வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஆபத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் அல்லது மோசடி சந்தேகம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்களின் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் உடனடியாக முடக்கும் சிறப்பு வசதியையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிகள் குறித்து மே 8 வரை பொதுமக்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கருத்துகள் பெறப்படும்; அதன் பின்னர் இறுதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.




