தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை “பந்தாடி”, தங்களுக்கு சாதகமானவர்களை நியமித்து தேர்தலில் தில்லுமுல்லு செய்ய மத்திய அரசு முயல்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஆதரவு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிகாரிகள் தன்னிடம் ஒரு கடிதத்தை காட்டியதாக கூறினார். அந்தக் கடிதம் மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியதாகவும், அதன் உள்ளடக்கம் ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகரித்து வருவதால் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன; எனவே நெல்லுக்கான ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார். இது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துறையிலிருந்து எழுதப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கடிதம் குறித்து பா.ஜ. தலைமையிலான மத்திய அரசை எடப்பாடி கே. பழனிசாமி கண்டிப்பாரா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பழனிசாமி ஆட்சியில் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அடுத்த ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு ரூ.3,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தி, அதை தடுக்க முயன்றால் முறியடிப்பேன் என்றார்.

மேலும், வணிக சிலிண்டர் விலையை ரூ.203 உயர்த்தியதால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததாகவும், டீ மற்றும் காபி விலையும் அதிகரித்ததாகவும் பிரதமர் மோடியை அவர் விமர்சித்தார். மக்கள் தி.மு.க. ஆட்சியே வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாக கூறிய ஸ்டாலின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக முடியாது என்ற பேச்சையும் உடைப்பேன் என்று தெரிவித்தார்.