விக்கிரவாண்டி: தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைந்தால், ஆட்சியை 6 மாதத்துக்குள் குலைக்கவும், பாஜவைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக அமர்த்தவும் வாய்ப்பு ஏற்படும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், இரட்டை இலைக்கு போடும் ஓட்டு மோடி, அமித்ஷா ஆகியோருக்கான ஆதரவாகவே மாறும் எனக் கூறினார். அதிமுக தற்போது பாஜ கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதிமுக வெற்றி பெற்றால் பாஜ வளர்ச்சிக்கு வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், அதிமுக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் தமிழக அரசியலை பாஜ புரட்டிப் போடக்கூடும் என எச்சரித்தார். தேர்தலுக்குப் பிறகு அரசியல் நகர்வுகள் வேறுபடலாம் என்றும், எச். ராஜா அல்லது அண்ணாமலை போன்றவர்களை முதல்வராக மாற்றும் சூழல் கூட உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், ‘விசில்’ பக்கம் ஓட்டுகள் சிதறக்கூடாது எனக் கேட்டுக் கொண்ட அவர், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் விசில் அடிப்பதற்கு இடமில்லை என்றும், விசில் அடிப்பவர்கள் சினிமா தியேட்டருக்கே பொருத்தமானவர்கள் என்றும் விமர்சனமாக பேசினார். திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து இருப்பது கொள்கை அடிப்படையில்தான் என்றும், விசிக பெற்ற வெற்றிகளால் கட்சி அங்கீகாரம் கிடைத்ததாகவும், அதற்கு திமுக ஆதரவு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.