ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பு பணியை முடித்த அமெரிக்க கடற்படையின் MQ-4C ‘டிரைட்டன்’ ட்ரோன், ரூ.1,800 கோடி மதிப்புடையதாகக் கூறப்படும் நிலையில், திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, அந்த ட்ரோன் மூன்று மணி நேரத்துக்கும் மேல் பறந்து கண்காணிப்பை நிறைவு செய்து, இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமானத் தளத்துக்கு திரும்பும் பாதையில் சென்றது.
திரும்பும் போது ‘7700’ என்ற அவசரகால சிக்னலை அனுப்பி, கீழ்நோக்கி இறங்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. எச்சரிக்கை அனுப்பிய சிறிது நேரத்திலேயே அது தொடர்பின்றி மாயமானது.
ட்ரோன் மாயமாவதற்கு முன்புவரை ரேடாரில் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. அது விபத்துக்குள்ளானதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெளிவாகாத நிலையில், அமெரிக்க படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.



