சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் த.வெ.க. வேட்பாளர் பிரபுவுக்கு ஆதரவாக கட்சி தலைவர் விஜய் நேற்று பிரசாரத்திற்கு வந்தார். ஆனால், பொதுக்கூட்ட உரைக்காக ஒதுக்கப்பட்ட அனுமதி நேரம் முடிந்திருந்ததால், அவர் உரையாற்றாமல் ரோடு ஷோ மூலம் மட்டுமே பிரசாரம் செய்து திரும்பினார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து காலை 10.30 மணியளவில் பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய், காரைக்குடி நகரம் முழுவதும் வாகனத்தில் பயணித்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் ‘விசில்’ சின்னத்தை ஏந்தி வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் பிரபு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படத்தை விஜய்க்கு அன்பளிப்பாக வழங்கினார்.

கோவிலூர் நான்கு ரோடு சந்திப்பில் தொண்டர்கள் வேல் வழங்கியதாகவும், அப்போது மர்மப் பொருள் ஒன்று அவரது தலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இன்கம்டாக்ஸ் ஸ்டாப்பில் இறங்கி கல்லூரி ரோட்டில் சில நிமிடங்கள் சைக்கிள் ஓட்டிச் சென்ற அவர், மீண்டும் வாகனத்தில் ஏற முயன்றபோது நெரிசலில் சிக்கினார். பொருட்கள் வீசப்படாமல் இருக்க ‘மப்டி’ போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பிரசாரம் நடைபெற திட்டமிடப்பட்ட இடத்திற்கு விஜய் மதியம் 2.34 மணிக்கு வந்தார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட 12.00 மணி முதல் 2.30 மணி வரை என்ற அனுமதி நேரம் கடந்திருந்தது. முத்துராமலிங்க தேவர் சிலையை வணங்கி, வாகனத்தில் நின்றபடியே சில நிமிடங்கள் கையசைத்து மக்களை பார்த்த அவர், பின்னர் திருச்சிக்கு புறப்பட்டார்.

பாதுகாப்பிற்காக சிவகங்கை எஸ்.பி. தலைமையில் கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 850 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விஜய் தாமதமாக வந்ததால் பேசாமல் கையசைத்து சென்றதாக வேட்பாளர் பிரபு தெரிவித்தார்.