அக்ஷய திருதியைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல நகை கடைகளில் தங்க நகைகளுக்கான முன்பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. ஜனவரியுடன் ஒப்பிடும்போது தற்போது தங்க விலை சற்றுக் குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று விருப்பமான நகைகளைத் தேர்வு செய்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சுமார் 35,000 நகை கடைகள் உள்ளதாகவும், அவற்றின் மூலம் தினசரி சராசரியாக 15,000 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால், இந்நாட்களில் வாங்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
சர்வதேச அளவில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடியதால் விலை உயர்ந்த நிலையில், நாட்டில் கடந்த ஜனவரி இறுதியில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.1,34,400 என்ற உச்சத்தை எட்டியது.
ஆனால், கடந்த மார்ச்சில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதி கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை குறைத்து கச்சா எண்ணெய் பக்கம் மாறியதால் தங்க விலை குறைந்ததாகவும், நேற்று சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்ஷய திருதியை ஏப்ரல் 20ஆம் தேதி வருகிறது.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், முன்பதிவு செய்த நாளிலிருந்து அக்ஷய திருதியை வரை எந்த நாளில் விலை குறைவாக இருக்கிறதோ அந்த விலைக்கு நகை வாங்கும் வசதி இருப்பதாக தெரிவித்தார். மேலும் குறைந்த செய்கூலி, சேதாரத்தில் 50% தள்ளுபடி, வைர நகைகளுக்கு சலுகைகள் போன்ற பல்வேறு ஆஃபர்களை கடைகள் வழங்குவதால், இந்த ஆண்டு விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.




