மூத்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) ஏப்ரல் 12 அன்று மும்பையில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுரையீரல் தொடர்பான பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

1933ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் பிறந்த ஆஷா போஸ்லே, மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி. 70 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

தாதாசாஹிப் பால்கே விருது, பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற அவர், இரண்டு முறை தேசிய விருதும் வென்றுள்ளார். தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தின் “செண்பகமே… செண்பகமே” பாடலுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.