தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், உளவு துறை நேரடியாக கட்சி பணிக்கு உதவ முடியாது. இருப்பினும், உளவு துறையில் உள்ள தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் வழியாக தென் மாவட்டத் தொகுதிகளில் மார்ச் கடைசி வாரத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகள் பட்டியலில் சிவப்பு புள்ளியிட்டு குறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த குறியிடப்பட்ட தொகுதிகளை மையமாக வைத்து தி.மு.க. தேர்தல் வியூக அமைப்பான ‘பென்’ நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி தகவல்களை உறுதிப்படுத்தியதாக தகவல். இதையடுத்து, நிலைமை ‘சீரியஸ்’ என்றால் மட்டுமே களமிறக்கப்படுவார் எனக் கூறப்படும் சபரீசன், அவரது நெருங்கிய நண்பர் ‘லண்டன் வெங்கட்’ மற்றும் ‘பென்’ இயக்குநர் மணிகண்டன் ஆகியோருடன் தென் மாவட்டங்களில் களப்பணியை தொடங்கியதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்.6 அன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி நிர்வாகிகளை சபரீசன் சந்தித்தார். திருநெல்வேலி தொகுதியில் முக்கிய எதிரணிகள் ஒரே சமூகத்தைச் சேர்ந்ததால் அந்த சமூக ஓட்டுகளைப் பெறுவது கடினம் என்றும், அதிக செலவு செய்யும் வாய்ப்பு இருப்பதால் பிற சமூக ஓட்டுகளை முழுமையாக ஒருங்கிணைத்தால்தான் வெற்றி சாத்தியம் என்றும் அவர் கூறியதாக தகவல். மேலும், நெல்லை மாநகராட்சியில் மேயர் தொடர்பான பிரச்னைகளால் 13 வார்டுகள் எதிர்மறையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் எதிரணி வேட்பாளர் அதிக செலவு செய்யக்கூடும் என்றும், கிராமப்பகுதிகள் சாதகமாக இருந்தாலும் சில பேரூராட்சிகள் கூட்டணிக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட வாக்குக் குழுக்களில் ஆதரவை உயர்த்த இலக்குவைத்த செலவினம் தேவை எனவும் அறிவுறுத்தியதாக தகவல்.
அதே நாளில் தென்காசி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி, தி.மு.க.க்கு சாதகமாக இல்லை எனக் கூறப்படும் கீழப்பாவூருக்கு நேரில் சென்று நிர்வாகிகளிடம் பேசினார். மேலும், அ.தி.மு.க. நிர்வாகிகளில் யார் தி.மு.க. பக்கம் வரக்கூடும், அவர்களை எவ்வாறு வசப்படுத்தலாம் என்ற பட்டியலை தயாரித்து அனுப்புமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஏப்.7 அன்று நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கியதால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்கும் வகையில் பேசினார் என்றும், தி.மு.க. போட்டியிடும் இரு தொகுதிகளில் வெற்றி கிடைத்தால் அடுத்த தேர்தலில் அதிக தொகுதிகளில் நிற்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததாகவும் தகவல்.



