மயிலாடுதுறை கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சம்பவ நேரத்தில் 18 வயது பூர்த்தியாகாதவரை சிறார் நீதி சட்ட விதிகளுக்கு மாறாக விசாரித்ததும், சாதாரண சிறையில் அடைத்ததும் சட்டவிரோதம் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு, 2022 ஆகஸ்ட் 17 அன்று மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க நகரத் தலைவர் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்புடையது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் ஒன்பது பேருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததுடன், 12 பேரை விடுதலை செய்தது. விசாரணை காலத்தில் ஜாமினில் வெளியே வந்த அஜித்குமார் என்பவர் 2024ல் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
சம்பவம் நடந்த போது சிறுவனாக இருந்தவரின் வழக்கை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்காமல், வயது வந்த குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் இணைத்து அமர்வு நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை விதித்தது தவறு என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டிருந்த போதும், அத்தகைய வசதி இல்லாத காரணத்தால் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் சட்டப்படி தவறு என கூறப்பட்டது.
சிறுவனின் தாய் சவீதா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறுவனை குற்றவாளி என அறிவித்து தண்டனை விதித்த அமர்வு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. வழக்கை மயிலாடுதுறை சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றி, மீண்டும் விசாரித்து ஆறு மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.
மேலும், 2023 ஜூன் 9 முதல் கடலூர் மத்திய சிறையில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு, சிறுவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. நீதிமன்றத்துக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் இ.வி.சந்துருவை பாராட்டியும் அமர்வு பதிவு செய்தது.




