திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டசபைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ. அப்துல் சமது பிரசாரத்தின் போது பல கிராமங்களில் எதிர்ப்பை சந்தித்தார். இதனால் சில இடங்களில் பிரசாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மருங்காபுரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள தேனூர் கிராமத்திற்கு பிரசாரம் செய்ய சென்றபோது, கிராமத்தைச் சேர்ந்த சிலர் வாகனங்களை நிறுத்தி பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தனர். அப்துல் சமது உள்ளூர்காரர் அல்ல என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சமைத்தவர் என்ற பழைய குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
அதேபோல் பிரான்பட்டி, வலசுப்பட்டி கிராமங்களில் வேட்பாளருடன் வந்த கரூர் எம்.பி. ஜோதிமணியையும் மக்கள் முற்றுகையிட்டு, ஐந்து ஆண்டுகளாக எந்தப் பணியும் செய்யவில்லை; இங்கு ஓட்டு கேட்க வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேட்பாளர் மற்றும் எம்.பி. அங்கு வாக்கு கேட்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
புத்தாநத்தம் கிராம பஞ்சாயத்தை இரண்டாகப் பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளையக்கவுண்டன்பட்டி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




