மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருமித்த குரலில் ஆதரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்த வேண்டும் என்ற விருப்பத்தை பல ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படுத்தி வந்ததாக மோடி கூறினார். அந்த நோக்கத்தை நடைமுறையாக்க இதுவே சரியான தருணம்; இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, மகளிர் இடஒதுக்கீட்டை அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 2029 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களும் சட்டசபை தேர்தல்களும் மகளிர் இடஒதுக்கீட்டை உள்ளடக்கி நடத்தப்படுவது கட்டாயம் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஜனநாயக நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்து, மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்; இது ஒரு மாபெரும் சாதனையாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பார்லிமென்டில் அனைவரும் ஒன்றிணைந்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவார்கள் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு முன்னேறவும், முடிவெடுப்பிலும், தலைமை தாங்கவும் வாய்ப்பு கிடைக்கும் போதே சமூக முன்னேற்றம் சாத்தியம் என மோடி கூறினார். விண்வெளி, விளையாட்டு, ஆயுதப் படைகள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் என்பதால் அரசியல் களத்திலும் அவர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.