ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்து சந்தேகங்கள் அதிகரித்து வரும் நிலையில், வான்வழி தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல்களை தொடங்கின. முதல்நாள் தாக்குதல்களிலேயே அந்நாட்டின் அப்போது உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது மகன் மொஜ்தபா கமேனி (56) கடந்த மார்ச் 8-ஆம் தேதி உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு மொஜ்தபா பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள், வீடியோ மற்றும் ஆடியோ வெளியீடுகள் வந்தாலும், அவற்றில் அவரது குரல் கூட இடம்பெறவில்லை என குறிப்பிடப்படுகிறது.

ஈரானைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம், கிடைத்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தாக்குதலால் கடுமையான முகக்காயங்களும் ஒன்று அல்லது இரண்டு கால்களில் பாதிப்புகளும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. முகம் சிதைந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் விழிப்புடன் இருந்து முடிவெடுப்பில் தீவிரமாக ஈடுபடுகிறார் என்றும், ஆடியோ கான்பரன்சிங் மூலம் உயர்மட்ட கூட்டங்களில் பங்கேற்கிறார் என்றும் ஈரான் தரப்பு கூறி வருவதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், மொஜ்தபா கமேனியின் காயங்கள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த விவரத்தையும் வெளியிடவில்லை எனவும் அந்த தகவல் கூறுகிறது.