புதுடில்லி: அசாம் சட்டசபை தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசுவது பின்னர் பிரச்னையாக மாறக்கூடும் என்பதால், அந்த சந்திப்பை தவிர்க்குமாறு பிரியங்கா காந்தி, செய்தித் தொடர்பாளர் பவன் கெராவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிவுறுத்தலை மீறி பவன் கெரா சந்திப்பை நடத்தி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான் மூன்று பாஸ்போர்ட் வைத்துள்ளார் என்றும், அமெரிக்காவில் ரூ.52,000 கோடி மதிப்பில் வியாபாரம் செய்கிறார் என்றும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன் வெளியான இந்த குற்றச்சாட்டுகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் அசாம் முதல்வருக்கு தொலைபேசியில் பேசி, பவன் கெராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், டில்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த காலத்தில் பவன் கெரா செயலராக இருந்தது தொடர்பாகவும் கருத்து தெரிவித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து, பவன் கெரா மீது அசாம் போலீஸ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்து, டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கைது செய்ய சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் ஹைதராபாத் சென்றதாகவும், டில்லி வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை போலீஸ் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஹைதராபாத் நீதிமன்றத்தை அணுகிய பவன் கெரா, ஒரு வாரத்திற்கு முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்த விவகாரம் பிரியங்காவை கடுப்பாக்கியதாகவும், தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்க வேண்டுமா என சில காங்கிரஸ் தலைவர்கள் பவன் கெராவை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.




