தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், வழக்கறிஞர் ஜெய்சுக் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் மட்டுமின்றி நகை, கொலுசு, குடம், வெள்ளி குத்துவிளக்கு போன்ற பொருட்களையும் வழங்குவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உதவி தொகை வழங்குவோம், வாஷிங் மெஷின் தருவோம், பரிசு கூப்பன் வழங்குவோம் போன்ற இலவச அறிவிப்புகள் தேர்தல் வாக்குறுதிகளாக தொடர்ச்சியாக வெளியிடப்படுவதாகவும், இவை அரசியல்சாசனக் கோட்பாடுகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானவை எனவும் மனுதாரர் கூறியுள்ளார்.
இதனால் தற்போது நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறுகின்றன எனக் கூறி, தமிழக சட்டசபை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தேர்தல் செயல்முறையை நிறுத்த தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சுமார் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த மனு அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகவும் ஓட்டுக்கு பணம் வழங்கும் புகார்களில் தேர்தல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




