சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மக்கள் முகங்களில் மகிழ்ச்சியையும், செல்லும் இடமெங்கும் கட்சியினரிடையே எழுச்சியையும் காண்கிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தன் அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக “திராவிட மாடல்” ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயன் மக்களிடம் வெளிப்படுவதாகவும், அடுத்த கட்டமாக அவர் குறிப்பிடும் “திராவிட மாடல் 2.0” மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இனிவரும் நாட்களில் மக்களோடு மக்களாக இணைந்து களப்பணி ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகள் வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் அதே உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய ஸ்டாலின், பெண்களின் முகங்களில் காணும் மலர்ச்சி, இளைஞர்களின் நம்பிக்கை, சிறுபான்மைச் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவு வெற்றிக்கு அடித்தளமாக இருப்பதாக கூறினார். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் எனச் சுட்டிக்காட்டி, “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்பதை உறுதி செய்யும் வகையில், வெயிலும் கோடை மழையும் பொருட்படுத்தாமல் ஒருங்கிணைந்து உழைக்குமாறு கட்சியினரை கேட்டுக்கொண்டார்.




