நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நடைபெற்ற ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டு வாசலுக்கே வந்து சேரும் வகையில் திட்டமிடப்படும் என்று தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் சாதாரண பணிகளுக்கே தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் லஞ்சம் என அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற நடைமுறைகள் “துன்புறுத்தல்” என்றும், லஞ்சம் அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல் மேல்நிலைக்கும் செல்கிறது என்றும் கூறி, முதலில் அந்த அமைப்பை முறியடிக்க வேண்டும் என்றார்.
லஞ்சமின்றி நலத்திட்டங்கள் சென்றடைய, ஆதார் போல ஒவ்வொரு குடும்பத்துக்கும் “தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு” வழங்கப்படும்; அதில் குடும்பத் தரவுகள் இடம்பெறும் என விஜய் கூறினார். அரசு அமைந்த 6 மாதங்களுக்குள் “தமிழக சேவை உரிமை” திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் “வெற்றி தமிழ்நாடு” என்ற சூப்பர் ஆப் உருவாக்கப்பட்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், புகார் பதிவு உள்ளிட்ட சேவைகள் மொபைலில் கிடைக்கும்; சேவை தாமதமானால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மக்கள் ஆட்சியின் பங்காளர்களாக இருக்க “myvetrithamilnadu.in” இணையதளம் மூலம் யோசனைகள் முன்வைக்கவும், கொள்கை முன்மொழிவுகளுக்கு ஓட்டுப்போடவும், சேவைகளை மதிப்பிடவும், பட்ஜெட் செலவுகளை கண்காணிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும் என அவர் அறிவித்தார்.
தொழில்நுட்பம் மற்றும் நிதிநிலை குறித்து, தமிழகம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் தலைநகரமாக மாற வேண்டும்; ஏஐ பல்கலைக்கழகம் மற்றும் ஏஐ நகரங்கள் அமைத்து உலகளாவிய நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்களை ஈர்க்க முயற்சிப்போம் என்றார். மாநிலக் கடன் ரூ.10.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகவும், வட்டிக்குச் செலவாகும் தொகை கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகளுக்கான வளங்களை குறைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.




