கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலுக்கான எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பா.ஜ.க. இரு தரப்பிலும் கவலை அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பரில் தொடங்கிய இந்த திருத்தத்தின் விளைவாக, மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.66 கோடியில் இருந்து 6.77 கோடியாக குறைந்துள்ளது. வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தொகுதி வாரியான வெற்றி–தோல்வி கணக்கீடுகள் மாறக்கூடும் என கூறப்படுகிறது.

நீக்கப்பட்ட 91 லட்சம் பெயர்களில் 66.6 லட்சம் பேர் திரிணமுல் பலமாக உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல். அதே நேரத்தில், மதுவா சமூகத்தினர் முக்கிய ஆதரவாக உள்ள 55 தொகுதிகளிலும் நீக்கங்கள் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது; குறிப்பாக நாடியா மாவட்டத்தில் மட்டும் 78% பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெண்கள் விகிதமும் குறைந்துள்ளது. திருத்தத்திற்கு முன் 1,000 ஆண்களுக்கு 959 பெண்கள் என்றிருந்த விகிதம், திருத்தத்திற்கு பின் 950 ஆக சரிந்துள்ளது; இது திரிணமுலின் பெண் வாக்காளர் ஆதரவுக்கு பாதிப்பாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

ஏறத்தாழ 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலில் 45 தொகுதிகளில் திரிணமுலும், 20 தொகுதிகளில் பா.ஜ.கவும் 10,000 ஓட்டுகளுக்குள் வெற்றி பெற்ற நிலையில், இந்த நீக்கங்கள் இம்முறை முடிவை தீர்மானிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.