தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, நடிகர்-அரசியல்வாதி விஜய் பிரசாரம் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் ஒரு திரைப்படம் லீக் ஆன விவகாரத்தையும் குறிப்பிட்டு, இது நடக்கக் கூடாத ஒன்று என்றார். லீக் எங்கிருந்து நடந்தது என்பதை கண்டறிய முறையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் லீக் ஆன படத்தை பார்க்காமல் சட்டப்பூர்வமான வழிகளில் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தைப் பொறுத்தவரை, பெரிய கூட்டங்களை முழுமையாக கட்டுப்படுத்துவது போலீசாரின் பொறுப்பாக மட்டும் இருக்க முடியாது என்றும், மக்கள் பாதுகாப்பும் பிரசாரத்திற்கு வரும் தலைவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சைக்கிளில் வந்தபோது மாலை இழுக்கப்பட்டதால் விஜய் கீழே விழுந்ததாக கூறப்படும் சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்றார்.
மேலும், பிரசாரத்தில் விஜய் பேச முடியும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும், பல ரோடு ஷோக்கள் நடந்தபோதும் காரைக்குடியில் அவர் பேச முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். விஜய் தனது கட்சிக்காக ஓட்டு கேட்கிறார் என்றும், விஜயை ஆதரிக்க நினைப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் செல்கிறார்கள் என்றும் கூறியதுடன், மாநில அரசியல் நிலவரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.




