ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டசபைத் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் வேட்பாளர் ஈஸ்வரப்பன் ஓட்டு சேகரிக்க வரவிருந்ததை எதிர்த்து கைத்தறி நெசவாளர்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
வாழைப்பந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பச்சையம்மன் நகரில், எம்.எல்.ஏ. வருகை தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் வீடுகளின் முன் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று கருப்புக் கொடிகளை அகற்றினர். இதனால் கிராமத்தினர் மற்றும் போலீசார், தி.மு.க. நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது; அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் பிரசாரக் குழு சென்றபோது நெசவாளர்கள் கருப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நெசவாளர் சரவணன் கூறுகையில், வாழைப்பந்தல் பகுதியில் பட்டு கைத்தறி நெசவை நம்பி சுமார் 200 குடும்பங்கள் வாழ்வதாகவும், கடந்த பருவமழை காலத்தில் மூன்று மாதங்கள் கைத்தறி இயந்திரங்களில் மழைநீர் தேங்கி தொழில் முடங்கியதால் உணவுக்கே சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த காலத்தில் எம்.எல்.ஏ. தரப்பில் நிவாரணம் அல்லது உதவி கிடைக்கவில்லை என்றும், மாவட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி இருந்தும் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாகவே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.




