பாட்னா: பீஹாரில் புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் நாளை முதல் தொடங்கும் என ஐக்கிய ஜனதா தள (ஜே.டி.(யு)) எம்.பி.வும் தேசிய செயல் தலைவருமான சஞ்சய் குமார் ஜா தெரிவித்தார். ராஜ்யசபா எம்.பியாக சமீபத்தில் பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், இன்று அல்லது நாளை முதல்வர் பதவியில் இருந்து விலகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த மாத ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார், மாநில கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனிடம் ராஜினாமா கடிதத்தை முறைப்படி அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவரது இருபது ஆண்டுகளுக்கும் மேலான மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

நிதிஷ் குமாரை பாட்னாவில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் குமார் ஜா, தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், நாளை முதல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்றும் கூறினார். பா.ஜ. பரிந்துரையின் அடிப்படையில் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள்; புதிய அரசு அமைப்பதில் பா.ஜ.க்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி மற்றும் ஜே.டி.(யு) மூத்த தலைவர், மாநில அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி உள்ளிட்டோர் நிதிஷ் குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் நடைபெறவுள்ள பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஹார் சட்டசபைக்கான பா.ஜ. தலைவரை தேர்வு செய்ய கட்சியின் பார்வையாளராக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை பா.ஜ. தலைமை நியமித்துள்ளது. முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், மாநில அமைச்சர்கள் லக்கேந்திர பஸ்வான், ஸ்ரேயாசி சிங் ஆகியோர் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்கலாம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியேற்பு விழாவில் பங்கேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன; பிரதமர் பங்கேற்பது உறுதியானால் ஏப்ரல் 18-ம் தேதி விழா நடைபெறலாம் என பா.ஜ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.