தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக விடுதியில், அசைவ உணவு தேர்வு தொடர்பான சர்ச்சை காரணமாக மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடுதியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு வழங்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதல் அசைவ உணவு வழங்கப்படும் நடைமுறை உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற விடுதி பொதுக்குழு கூட்டத்தில், ஞாயிறு உணவில் மாட்டிறைச்சி சேர்க்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் விடுதி நிர்வாகம் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், விடுதி மாணவர்களுக்கான தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் இதற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்ததால் விவகாரம் மேலும் தீவிரமடைந்தது.
இதையடுத்து, ஏப்.10 இரவு ஒரு தரப்பு மாணவர்கள் விடுதி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நிர்வாகம் ‘கமிட்டி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், அனுமதியின்றி விதிமுறைகளை மீறி சிலர் விடுதி வளாகத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக கூறப்படுவதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு மாணவர்கள் ‘எங்களுக்கு பன்றி இறைச்சி சமைத்து தர வேண்டும்’ என கோரியதால், இரு தரப்புகளுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை மோசமடையாமல் நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



