சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற தமிழக மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை மாற்றம் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானதும், மாவட்ட தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி, நாற்காலிகளை தூக்கி வீசியதாகவும், இதனால் கூட்ட அரங்கில் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ராமலட்சுமி தான் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என்றும், இதை ஏற்காவிட்டால் மாவட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அல்கா லம்பா எச்சரித்ததாக தகவல். இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெளியேறினர்.

மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், பெண்களுக்கு 33% ஒதுக்கீடு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 28 தொகுதிகளில் இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்ததாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், கட்சி விரோத நடவடிக்கைகள் என்ற காரணம் கூறி ஹசீனாவை அல்கா லம்பா நீக்கியதாகவும், அதற்கு எதிர்ப்பாக ஹசீனா ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.