சென்னை: தமிழக பதிவுத்துறையில் ‘அயல் பணி’ என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 589 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், அதில் சுமார் 50 சதவீத இடங்களில் முழுநேர சார் பதிவாளர்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. அதிக பத்திரங்கள் வரும் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர்கள் அல்லது உதவியாளர்கள் பத்திரப்பதிவு பணியை மேற்கொண்ட நிலையில், தற்போது மாவட்ட பதிவாளர்கள் அந்தப் பணியிலிருந்து விலக்கப்பட்டு நிர்வாகப் பணிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் ‘பொறுப்பு சார் பதிவாளர்’ ஆக தொடர்ந்து செயல்படுகின்றனர். பதிவு சட்டப்படி பத்திரப்பதிவை மேற்கொள்ள அதிகாரம் சார் பதிவாளர்களுக்கே எனவும், ஆனால் இத்துறையில் மட்டும் சார் பதிவாளர்களை ஓரங்கட்டிவிட்டு உதவியாளர்கள் பொறுப்பு அதிகாரிகளாக செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் சார் பதிவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ஒரு அலுவலகத்தில் பதவி காலியாகும் போது பொறுப்பு ஏற்பாடு அதிகபட்சம் 20 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றாலும், சென்னை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி போன்ற மண்டலங்களில் அதிக பத்திரங்கள் வரும் அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளாக முழுநேர சார் பதிவாளர்கள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட அலுவலகங்களை வசூலுக்காகவே கேட்டு பெறுவதாகவும், இதற்கு மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் துணை நிற்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பதிவுத்துறை தலைவரிடம் முறையிட்டுள்ளதாகவும், தகுதியான உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி முழுநேர சார் பதிவாளர்களாக நியமிக்க முயற்சி நடப்பதாகவும், தேர்தல் முடிந்த பின் தீர்வு ஏற்படும் என மேலதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் சார் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.