14 வயது சிறுமிகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்துவதில் வதந்திகளால் தயக்கம் காட்ட வேண்டாம்; கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இது முக்கியம் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கான இலவச தடுப்பூசி திட்டத்தை பிப். 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாகவே தமிழக அரசு ஜனவரியில் திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது.
தேசிய அளவில் திட்டம் தொடங்கிய பின்னர், தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 7 லட்சத்துக்கும் அதிகமான சிறுமிகளை உள்ளடக்குமாறு திட்டம் விரிவுபடுத்தப்பட்டதாகவும், இதுவரை 60,000க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் சில இடங்களில் தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்விளைவுகள் குறித்து பெற்றோர் அச்சம் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும், பல தவணை தடுப்பூசி தேவைப்படும் என்ற பேச்சுகள் வதந்திகள் மட்டுமே; இது ஒரே தவணை தடுப்பூசி என்றும், மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் விளக்கினர்.
மேலும், இந்த தடுப்பூசியை பள்ளிகளில் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கட்டணமின்றி செலுத்திக் கொள்ளலாம் என கூறி, குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெற்றோர் தயக்கமின்றி அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.




