புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா புதிய பெயர்கள் சூட்டிய நடவடிக்கையை மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா அவ்வப்போது சொந்தம் கொண்டாடி வருவதால், இந்தியா–சீனா இடையே இடையிடையே பதற்றம் உருவாகி வருகிறது. 2020-ல் லடாக்கை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு உறவுகளில் விரிசல் ஏற்பட்டாலும், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சில முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அருணாச்சலத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சீனா தனிச்சையாக வேறு பெயர்களை அறிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், இது இந்தியப் பகுதிகளுக்கு “போலியான” பெயர்கள் சூட்டும் செயல் என்றும், மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
அருணாச்சல மீது சீனா உரிமை கோருவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்றும், இத்தகைய “மலிவான முயற்சிகளால்” இந்திய எல்லைகளை மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையே உறவுகளை சீர்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என எச்சரித்து, இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.



