பெய்ரூட்: லெபனான் எல்லையோரத்தில் உள்ள மூன்று கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகள் மூலம் தரைமட்டமாக்கியதாக லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரான் ஆதரவு கொண்ட ஹெஸ்பொல்லா அமைப்பின் பதுங்குக் குழிகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை அழிப்பதற்காகவே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தரப்பு கூறுவதாக லெபனான் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், தைய்பே, நகுரா மற்றும் தீர் செர்யான் கிராமங்களில் வீடுகள் ஒட்டுமொத்தமாக வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தெற்கு லெபனானில் லிட்டானி ஆறு வரையிலான பகுதிகளை கைப்பற்றி பாதுகாப்பு மண்டலம் அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 10 லட்சம் பேர் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போரில் இதுவரை லெபனானில் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.