மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து, “ஓட்டு வங்கி அரசியல்” காரணமாக தேச விரோதமாக செயல்படும் குழுக்களுக்கும் அக்கட்சி ஆதரவு அளிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
சிலிகுரியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள சிலிகுரி வழித்தடத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருவதாக கூறினார். அந்த வழித்தடத்தை துண்டிக்கப் போவதாக சில சிறு குழுக்கள் மிரட்டல் விடுப்பதாகவும், வடகிழக்கை தனியாக ஒதுக்கி வைக்கவே அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய குழுக்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ் “வீதியிலிருந்து பார்லிமென்ட் வரை” செயல்படுகிறது என்றும், இதுவே அக்கட்சியின் உண்மையான முகம் என்றும் மோடி கூறினார். கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை பல வழிகளில் சுரண்டி அழித்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், முக்கியமான மத்திய திட்டங்களை மாநில அரசு நிறைவேற்ற விடாமல் முடக்கி வைத்துள்ளதாக கூறிய அவர், மேற்கு வங்கத்தில் மத்திய அரசு திட்டங்கள் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மதரசாக்களை மேம்படுத்த 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மாநில வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாகவும், பழங்குடியினர், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான கட்சியாக திரிணமுல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



