பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின், நாட்டிலேயே மிக ஊழல் நிறைந்த ஆட்சி தி.மு.க. நடத்துகிறது என்றும், அந்த ஆட்சியை இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வீழ்த்தும் என்றும் சனிக்கிழமை தெரிவித்தார். இந்த தேர்தல் ஊழலும் நல்லாட்சியும் மோதும் போட்டி எனவும் அவர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பா.ஜ. வேட்பாளரும் மாநிலத் தலைவருமான நயினார் நாகேந்திரனை ஆதரித்து நிதின் நபின் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். நடிகர் சரத்குமாரும் பிரசாரத்தில் பங்கேற்றார்.
ரோடு ஷோ முக்குராந்தல் பகுதி வரை சென்றது. சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள சர்ச்சில் ஜெபக்கூட்டம் முடித்து வந்த கிறிஸ்தவர்களை பார்த்து நிதின் நபின் கையசைத்து வாக்கு கேட்டார்; சிலர் குழந்தைகளை கொண்டு வந்து ஆசீர்வாதம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார். தேர்தலை “தமிழகம் - டில்லி” போட்டி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவதை மறுத்த அவர், இது நல்லாட்சி vs ஊழல் என்ற போட்டி என்றார்.
மேலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை இயற்ற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அவர், அந்த சட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.




