நெல் ஊக்கத்தொகை தொடர்பான சர்ச்சை நீடிக்கும் நிலையில், மத்திய அரசின் கடிதத்தை வெளியிட தயாரா என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
தன் பதிவில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேளாண் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாகவும் தொடர்ச்சியாகவும் நேர்மறையாகவும் ஈடுபட வேண்டும் என அவர் கூறினார். ஆனால் முதல்வரும் அவரது கட்சியும் “பொய் பிம்பங்கள்” உருவாக்கும் போக்கையே தொடர்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களில் இறக்குமதியைச் சார்ந்திருப்பது, வெளிப்புறத் தாக்கங்கள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களால் உணவுப் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். பருப்பு வகைகளிலும் இதே நிலை இருப்பதாகக் கூறிய அவர், தேவைக்கும் விநியோகத்திற்கும் இடைவெளி உள்ள பயிர்களில் விவசாயிகள் நல்ல விலையைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் என்பது தேசிய உணவுப் பாதுகாப்புக்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளும் அழைப்பாகவே இருந்தது என நிர்மலா தெரிவித்தார். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பல மாநிலங்கள் இதை கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் புரிந்து செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார். மேலும், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் சுயசார்பை நோக்கி நகராமல், வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படுகிறது என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அந்தக் கடிதம் மாநில அரசின் வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், முதல்வரே அதை வெளியிட்டிருப்பார் என நிர்மலா கூறினார். கடிதத்தின் இணைப்பை வழங்குவதில் தங்களுக்கு தயக்கம் இல்லை என்றும், தேச நலனில் அக்கறை கொண்ட எந்த முதல்வரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.




