சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர் அணிகள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், சில இடங்களில் வெளிப்படையான ஆதரவு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தி.மு.க. தலைமையிடத்தில் கவலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விஜயின் த.வெ.க. வருகைக்குப் பிறகு, ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் வாக்குகளை ஈர்க்க அ.தி.மு.க.-பா.ஜ.க. தரப்பு வியூகம் அமைத்து செயல்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. பல தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் நேரடியாக ரசிகர் அணிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில், அஜித் ரசிகர்கள் அவருக்கு அஜித் படங்களை பரிசாக வழங்கியதாக தகவல். சென்னை, கோவை, திருப்பூர், நாகர்கோவில், சிவகாசி உள்ளிட்ட இடங்களில் சில தொகுதிகளில் அஜித்-பழனிசாமி படங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அஜித் தனது ரசிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க சுதந்திரம் அளித்துள்ளதாகவும், அவர்களில் பலர் த.வெ.க. எதிர்ப்பு மனநிலையில் இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. தரப்பு ஆதரவை ஒருங்கிணைக்க முயல்வதாகவும், அதே நேரத்தில் தி.மு.க. வேட்பாளர்களும் அஜித் ரசிகர்களை சந்தித்து ஆதரவு கேட்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் ரஜினி ரசிகர் அணிகளையும் கூட்டணி தரப்பு தங்கள் பக்கம் இழுக்க முயல்வதாக தகவல். சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அ.தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்து வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதாக அறிவித்ததாகவும், கோவை, சிவகாசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் த.வெ.க. மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இதன் தொடர்ச்சியாக த.வெ.க. எதிராக பிரசாரம் நடப்பதாகவும், ரஜினியின் ஆதரவை பெற பா.ஜ.க. தரப்பிலும் முயற்சி நடைபெறுவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.