பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சேலம் மேற்கு தொகுதியில் ராமதாஸ் அணியின் சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ. அருளை ஆதரித்து பள்ளப்பட்டியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் நடைபெற இருந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அவர் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இரு தொண்டர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற நிலையில், அவர் தடுமாறி திடீரென மயக்கம் அடைந்ததாக தகவல். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குரங்குச்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்; அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை “சற்று மோசமாக” இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, ராமதாஸ் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.




