தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் வெற்றிக்காக பணம் “முதலீடு” செய்பவர்கள், அதை பல மடங்காக மீட்டெடுக்கவே முயல்வார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
ஆண்டிபட்டியில் வனத்துறை தொடர்பான பிரச்னைகள், கண்ணகி கோவிலுக்கு செல்ல வழியில்லாத நிலை, வருஷநாட்டில் சுமார் 80 கிராமங்களை அப்புறப்படுத்தும் விவகாரம் உள்ளிட்ட பல சிக்கல்கள் இருப்பதாக அவர் கூறினார். மேலும் கல் குவாரிக்காக மலைகளை வெட்டி எடுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்து, வெடிமருந்துகள் வைத்து மலைகளை தகர்க்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
ஓட்டுக்காக பணம் கொடுக்கப்படும் போது ஜனநாயகம் செத்து “பணநாயகம்” வெல்லும் என சீமான் தெரிவித்தார். அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தனர் என கேள்வி எழுப்பிய அவர், இலவசங்களையே நோக்கி சென்று தன்மானத்தை இழக்க வேண்டாம் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த அவர், இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா, கொலை-கொள்ளை நடக்காமல் இருக்குமா என கேள்வி எழுப்பினார். இரண்டும் ஒரே கட்சிதான் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
மேலும் ஆண்டிபட்டியிலேயே இரு கட்சிகளின் சார்பில் அண்ணன்-தம்பி வேட்பாளர்களாக போட்டியிடுவது ஜனநாயகமா எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.




