நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேலாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக ஸ்டாலின் கூறியிருந்தார். இதை மறுத்த நிர்மலா சீதாராமன், MSP-க்கு மேலான போனஸ் அல்லது ஊக்கத்தொகை அறிவிப்பது மாநில அரசின் அதிகாரம் என்றும், அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடிதத்தில் உள்ளதைத் தவிர வேறு எதையும் தான் பேசவில்லை என்றும், இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும், இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனின் கூற்று உண்மை என்றால், அந்தக் கடிதத்தை பொதுவில் வெளியிட அவர் தயாரா என முதல்வர் கேள்வி எழுப்பினார்.




