தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரம் மற்றும் ஓட்டுச்சாவடி சார்ந்த பணிகளுக்கான செலவு தினமும் ரூ.500 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக 300 ஓட்டுச்சாவடிகள் இருக்கும்; ஒவ்வொரு பூத்திலும் 1,000 வாக்காளர்கள் வரை இருக்கலாம். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள், ஒரு பூத்துக்கு குறைந்தது 200 ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கு மேல் கிடைக்கும் ஓட்டுகள் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் கணக்கிடுவதாக கூறப்படுகிறது.
இதற்காக துண்டறிக்கை விநியோகம், கட்சி கொடி ஏந்தி ஊர்வலம் போன்ற பணிகளுக்கு ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 200 பேரை பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு தினமும் ரூ.200 வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒரு பூத்துக்கு தினசரி செலவு சுமார் ரூ.75,000 ஆகும் என கூறப்படுகிறது.
அந்த கணக்கில், 300 பூத்துகள் உள்ள ஒரு தொகுதிக்கு தினமும் சுமார் ரூ.2.25 கோடி செலவாகலாம். மாநிலத்தின் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை எடுத்துக் கொண்டால்கூட, மொத்த தினசரி செலவு சுமார் ரூ.450 கோடி ஆகும்; இதை ரூ.500 கோடி என வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
மேலும், தேர்தல் ஆணையம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்டறிந்தால் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சத்தால், இத்தகைய செலவுகள் பெரும்பாலும் ரொக்கமாகவே செய்யப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.




