நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை, 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தும் எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்தது.
அறிக்கையின் படி, பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கிய நிலையில், பல நாடுகளின் வலியுறுத்தலுக்குப் பிறகு இரு தரப்பும் இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. அந்தப் பின்னணியிலேயே போர் நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்றது. ஈரான் தரப்பில் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழு கலந்து கொண்டது. பேச்சு நேற்று காலை வரை நீடித்தும் முடிவுக்கு வரவில்லை.
அமெரிக்கா, எதிர்காலத்தில் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும், அணு ஆயுதத்தை விரைவாக உருவாக்க உதவும் கருவிகள் அல்லது தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதை ஏற்க ஈரான் மறுத்தது.
மறுபுறம், அணுசக்திக்காக யுரேனியத்தை செறிவூட்டுவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பான கோரிக்கைகளை ஈரான் முன்வைத்ததாகவும், அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சு தோல்வியில் முடிந்ததாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. அடுத்த சுற்று பேச்சுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு நாடுகளும் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.




