வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை செல்லும் என தனி நீதிபதி உறுதிப்படுத்திய உத்தரவை எதிர்த்து, நடிகரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு 2015-ல் வெளியான புலி திரைப்படத்துடன் தொடர்புடையது. 2015 செப்.30-ல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, புலி படத்திற்கான சம்பளமாக ரூ.16 கோடி காசோலையாகவும், கூடுதலாக ரூ.15 கோடி பணமாகவும் பெற்றதாகத் துறை தெரிவித்தது.
அந்த கூடுதல் ரூ.15 கோடி தொகை கணக்கில் காட்டப்படவில்லை எனக் கூறி, வருமானத்தை மறைத்ததாகக் கருதி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளுபடி செய்தார். அபராத உத்தரவு உரிய காலக்கெடுவுக்குள் பிறப்பிக்கப்பட்டதாகவும், அதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை என்பதால் நீதிமன்றம் தலையிட காரணமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மேல்முறையீடு செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தனது தரப்பு விளக்கங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும், புலி படத்திற்குப் பிந்தைய காலத்துக்குரிய வருமானத்தையும் துறை சேர்த்துள்ளதாகவும், கால அவகாசங்கள் வேறுபடும் நிலையில் பல சிக்கல்கள் உள்ளதாகவும் விஜய் தரப்பு வாதிட்டுள்ளது. இந்த மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




