தவெக தலைவர் விஜய், ‘வெற்று விளம்பர மாடல் ஆட்சி’ என விமர்சித்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளியை மேற்கோள் காட்டி, ஒரு சகோதரியின் வீட்டுச் சுவரில் அனுமதியின்றி கட்சி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைக்குழந்தையுடன் இருந்த இன்னொரு சகோதரியையும் வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறினார்.
வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை இருப்பதாகவும், அதை மீறியதோடு தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டுவதாகவும் அவர் கூறினார். இத்தகைய அராஜகப் போக்கை காவல் துறை தடுத்து நிறுத்தி, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




