பா.ஜ.க. தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது போல இது டெல்லி–தமிழகம் இடையிலான தேர்தல் அல்ல என்று தெரிவித்தார். மாறாக, “கோபாலபுரத்தின் ஊழல்வாதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல்” என அவர் விமர்சித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மெட்ரோ திட்டத்துக்காக தி.மு.க. அரசு தவறான திட்ட அறிக்கையை அனுப்பியதாக குற்றம்சாட்டினார். அந்த அறிக்கையில் மெட்ரோவுக்குப் பதிலாக சாலையில் தனிப்பாதை பிரித்து பேருந்து செல்லும் வழித்தடம் அமைப்பதற்கே கோரியுள்ளதாகவும், மதுரைக்கு மெட்ரோ வேண்டும் என்று மாநில அரசு கேட்கவில்லை என மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டதாகவும் கூறினார்.
மேலும், மதுரையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மெட்ரோ குறித்து பொய்யான பிரசாரம் செய்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார். உண்மையில் மெட்ரோ கேட்டிருந்தால், மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிட வேண்டும் என்றும், மத்திய அரசின் கடிதத்திற்கு இதுவரை தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறினார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் தொகை உள்ளிட்ட விவரங்களைச் சேர்த்து புதிய திட்ட அறிக்கை தயாரித்து மதுரை மெட்ரோ திட்டத்தை பெற்றுத் தருவோம் என அண்ணாமலை தெரிவித்தார். நெல்லுக்கான ஊக்கத் தொகை தொடர்பாகவும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பிய அவர், மாநிலத்தில் பல பிரச்னைகள் இருக்கும் நிலையில் முதல்வர் ஐ.பி.எல். பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார் என விமர்சித்தார்.
அரசியல் சூழல் குறித்து, தமிழகத்தில் தேர்தல் களம் இருமுனைப் போட்டியாக மாறிவிட்டதாகவும், தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றினாலும் ஆட்சிக்கு எதிரான அலை பெரிதாக உருவாகி வருவதாகவும் கூறினார். நடிகர் விஜய்க்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கி பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





