சென்னையில் தமிழக பாஜ தேர்தல் அறிக்கையை முன்னாள் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். நலத்திட்டங்கள், பண்டிகை சார்ந்த சலுகைகள் மற்றும் பல துறைகளுக்கான உதவித் திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

முக்கிய வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி காலங்களில் ஆண்டுக்கு 3 விலையில்லா எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பாலியல் குற்றங்கள், போக்சோ உள்ளிட்ட கொடூர வழக்குகளுக்கான சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; பேருந்துகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா வசதி உறுதி செய்யப்படும்; நிர்பயா நிதி முழுமையாக பயன்படுத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை, தனி போதைப்பொருள் ஒழிப்புத்துறை, கடலோர போதைப்பொருள் புலனாய்வு பிரிவு, பிரத்யேக உதவி எண் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதும் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளது.

விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை, இறால், தேனீ, கோழி வளர்ப்பு போன்ற துணைத் தொழில்களை தொடங்க ஒருமுறை ரூ.50,000 உதவி; மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு சந்தை ஆதரவு; ஆண்டுக்கு ரூ.9,000 நிதியுதவி ஆகியவை கூறப்பட்டுள்ளன. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கல்விக் கடன், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏஐ-ரோபாட்டிக்ஸ் பயிற்சி, முதன்முறை தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம் பெற்றுள்ளன.