உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதி நேற்று லக்னோவில் இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இது ‘தற்சார்பு இந்தியா’ முயற்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ராணுவ தளவாடங்களில் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலையில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரம்மோஸ் திட்டம் இந்தியா–ரஷ்யா கூட்டு முயற்சியாக செயல்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி மூலம் இறக்குமதி குறையும்; பொருளாதாரத்துக்கும் ஆதரவாக இருக்கும்; ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கும் வலுசேர்க்கும் என கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு பயன் ஏற்படுவதுடன், 100-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளதாக தகவல்.
பிரம்மோஸ் ஏவுகணையை நிலம், கடல் மற்றும் வான் தளங்களில் இருந்து ஏவ முடியும். ஒலியை விட சுமார் மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகவும், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் வல்லமை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிப்பதால் ஏற்றுமதிக்கும் வாய்ப்பு உருவாகும் நிலையில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, ஏவுகணைகளின் முதல் தொகுதியை ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைத்தார்.





