கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வினியோகிக்க முயன்றதாக கூறப்படும் கூப்பன்கள் மற்றும் இலவசப் பொருட்களுக்கான படிவங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், எம்.என்.ஜி. வீதி, ம.ந.க. வீதி மற்றும் வெங்கடராமன் மண்டபம் பகுதிகளில் கூப்பன் மற்றும் இலவசப் பொருள் படிவங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழு அங்கு சென்று ஆய்வு செய்தது.
சோதனையில், எம்.என்.ஜி. வீதியில் பிரபாகரன் என்பவரிடமிருந்து ரூ.8,000 மதிப்புள்ள 66 ‘இல்லத்தரசி’ கூப்பன்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இலவசப் பொருட்களுக்கான 2 படிவங்களும் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களை கவரும் முயற்சி நடந்ததாகக் கூறி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தியாகராஜன் புகார் அளித்துள்ளார்.





