கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களை கொட்டகைகளில் திரட்டி, கூப்பன் மூலம் ஆசை வார்த்தை கூறி படிவங்களில் கையெழுத்து பெறுவதாக, அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் பல இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு டிவிஷனில் குறைந்தபட்சம் மூன்று கொட்டகைகள் இருப்பதாகவும் கூறினார். தெற்கு, வடக்கு தொகுதிகளிலும் இதுபோன்ற ஏற்பாடுகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அ.தி.மு.க. பிரசாரத்திற்கு மக்கள் செல்லாமல் தடுப்பதற்காகவே அவர்களை அங்கு வைத்திருப்பதாகவும், உணவு வழங்கி சம்பளம் தருவதாகவும் அவர் கூறினார். கூப்பன் வழங்கிய விவகாரத்தில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொட்டகைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் அளித்த மனுவில், ‘தி.மு.க.க்கு ஓட்டளியுங்கள்; ஆட்சிக்கு வந்ததும் கூப்பனில் குறிப்பிடப்பட்ட பொருட்களில் ₹8,000 மதிப்புக்கானவற்றை இலவசமாக பெறலாம்’ என கூறி கையெழுத்து பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராம் நகர் 67வது வார்டு, விவேகானந்தா ரோடு, கே.எம்.சி.ஹெச். சிட்டி சென்டர் மருத்துவமனை எதிர்புற வீடுகளில் வசிக்கும் பெண்களிடம் சில தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூப்பன் வழங்கி உறுதிமொழி கையெழுத்து பெற்றதாகவும், முன்பே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், புகார் அளித்தவரின் மனைவியை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியதாகவும், கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதாகவும் அவர் கூறினார்.