தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.க.) ஆதரவை திரட்டும் நோக்கில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தொழில் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக உள்ள கோயல், கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 3-ஆம் தேதி சென்னை வந்தார். அதன்பின் தமிழகத்தில் முகாமிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

ஏப்ரல் 10-ஆம் தேதி காலை கோவையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் உரையாடிய அவர், பின்னர் ஈரோட்டில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுடன் இணைந்து வணிகர்களிடம் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

திருப்பூரில் ஜவுளி உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய கோயல், மதுரையில் தமிழக வர்த்தகம் மற்றும் தொழில் துறை சங்க நிர்வாகிகளையும் சந்தித்தார். இந்த கூட்டங்களில் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கி, தே.ஜ.க. கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தமிழக வளர்ச்சிக்கு “இரட்டை இன்ஜின்” அரசு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.